குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது, முஞ்சிறை என்ற ஊரில் ‘அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம்’ தலைசிறந்த சித்த வைத்தியர் பெருமக்களால் அமையப்பெற்றது. அனைத்து வைத்தியர்களும் தங்களிடம் இருந்த வைத்திய சுவடிகளை அங்கு நூலகமாக அடுக்கி வைத்து, குருகுலமாக சித்த வைத்திய படிப்பும் நடந்துகொண்டு இருந்தது. முதல் சித்த மருத்துவ பட்டப் படிப்பு கேரள பல்கலை கழகத்தின் கீழ் இங்கு துவங்கப்பட்டது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு, அந்த படிப்பு நிறுத்தப்பட்டு, அந்த சித்தா பாடத்திட்டமும், புத்தகங்களும், மற்றும் வர்ம பாடங்களும், மலையாளத்தில் மாற்றப்பட்டு உலகம் முழுதும் பிரசித்தி பெற்றது.
இந்த சமயத்தில், அந்த சங்கத்தின் தாளாளரின் மகனாகிய மரு.மோகன் தாஸ் அவர்கள், சங்க தலைவராக தெரிந்தெடுக்கப்படுகிறார். அவரின் சீரிய முயற்சியால், அகில திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம் (ATSVS) சித்த மருத்துவ கல்லூரி எனும் முதல் தனியார் சித்த மருத்துவ கல்லூரி தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி பாடத்திட்டத்தில் சித்தா மற்றும் வர்மம் முழுமையாக உட்படுத்தப்படாததால், பட்டதாரி சித்த மருத்துவர்களால் கேரள ஆயுர்வேத மருத்துவர்களை போல சிறந்து விளங்க முடியவில்லை என்பதை மரு.மோகன் ராஜ் புரிந்து கொண்டார்கள். எனவே, தமது சங்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுவடிகளை புத்தக வடிவில் கொண்டு வந்து சித்த மருத்துவ மாணாக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை வாழ்வில் ஒரு சவாலாக ஏற்றார். அப்பொது மத்திய அரசிலிருந்து கிடைத்த சிறிய தொகையை வைத்து சில சுவடிகளை பதிப்பித்தார். அவை அத்தனையும், அன்றுவரை சித்த மருத்துவ சமூகம் பார்த்திராத நூல்கள் ஆகும். ஏறக்குறைய 2000 சுவடிகளை சுத்தம் செய்து, கணினி உதவியுடன் ஸ்கேன் செய்து, அவற்றின் பொருளை சொல்லி, நூலாக பதிப்பிக்க வேண்டும் என்பதை வாழ்நாள் முயற்சியாக கொண்டிருந்தார்.
ஏறக்குறைய 500 க்கும் அதிகமான நூல்களை புத்தக வடிவில் கொண்டு வந்துவிட்டார். எவ்வளவுதான் சுவாலைகளை எதிர்கொண்டு அவர் வெளிக்கொணர்ந்தாலும், அந்த புத்தகங்களை எவரும் வாங்குவாரில்லை, அல்லது அதை ஸ்கேன் செய்து PDF ஆக மாற்றி பிறர் வெளியிட்டு விடுவர். மத்திய மாநில அரசு அதிகாரிகளையும், சித்தா அதிகாரிகளை அணுகியும் எந்த வித நிதி உதவியும் அவருக்கு கொடுக்க யாரும் முன்வரவில்லை. எனினும் 24 மணி நேரமும் மிகவும் வறுமையான சூழ்நிலையிலும் கூட சுவடிகளை புத்தகமாக்குவதையே செய்துகொண்டிருந்த அவருக்கு மனைவி மட்டும் பக்கபலமாக் இருந்து வந்தார். தமிழுக்கு உ.வெ.சாமிநாத ஐயர் செய்த தொண்டைப்போல, சித்த மருத்துவ சமூகத்துக்கு இவர் ஆற்றிய சுவடிகளை புத்தகமாக்கும் தொண்டு பாராட்டுதற்குரியது. அன்னாரின் நிறைவடையாத கனவாகிய, மீதி சுவடிகளையும் புத்தகமாக்கி வெளியிட அரசு அவரின் மனைவிக்கு நிதி உதவி செய்தால், இன்னமும் 1500 புத்தகங்கள் வெளிவரும். காலத்தால் அழியாத தொண்டை செய்தவரை உயிருடன் இருக்கும் போது கைகொடுத்து தூக்கி விடாததும், உரிய அங்கீகாரம் வழங்காததும் தமிழ் சமூகத்தில் புதிதல்ல, இந்நிலை மாறவேண்டும்.
நேற்று (25-ஜூன்-2021) சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளை பாதுகாத்து புத்தகமாக்கிய அவரது சேவை நிரந்தரமாக ஓய்வெடுத்தது. அவரின் ஆத்மா இறையருளின் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம்.
Dr. Arul Amuthan
M.D. (Siddha), MSc.(Medical Pharacology), Phd.
மக்களை காக்கும் சித்த மருத்துவ குழு.