தமிழக அரசு 2 செப்டம்பர் 2021 ல் இந்திய நாட்டின் முதல் சித்த மருத்துவ பல்கலைகழகம் சென்னைக்கு அருகில் அமைய இருப்பதான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக மக்களின், சித்த மருத்துவ ஆர்வலர்களின் மற்றும் சித்த மருத்துவர்களின் நீண்ட நாளைய இந்த கோரிக்கை நிறைவேதும் தருணம் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவமானது, தமிழ் மொழியின் உயரிய படைப்பாகும். அவைகள் நேற்றும், இன்றும், நாளையும் உலக மக்களுக்கு பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அடுத்த படியாக, தமிழின் சித்த மருத்துவம் உலகறிய செய்யப்பட வேண்டும். இன்றைய நிலையில், உலகம் முழுதும் பரந்த தமிழர்களிடையே, தமிழனின் பாரம்பரிய மருத்துவம் குறித்த புரிதல்கள் இன்னமும் அதிகமாக்கப்பட வேண்டும். உலகெங்கும் சித்த மருத்துவம் பரவி கனிகொடுக்க வேண்டுமெனில், அதன் வேர் இருக்கும் தமிழ் நாட்டில் அதற்கு உரமிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிற கோரிக்கைகளான, தனி சித்த மருத்துவ அமைச்சகம், அனைத்து சித்த மருத்துவ ஓலைசுவடிகளை புத்தகமாக வெளியிடுதல், மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ கல்லூரி, மாவட்டத்துக்கு ஒரு மூலிகை பண்ணை, ஒருங்கிணைந்த மருத்துவ முறை, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா திட்டம், வெளி மாநிலங்கள்/நாடுகளில் சித்த மருத்துவ இருக்கை இவைகளையும் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வெண்டிய கடமை நமக்கு உண்டு. இந்த அரசு, சித்த மருத்துவம் தழைக்க தேவையான அனைத்து செயல்களையும் செய்யும் என்னும் நம்பிக்கை தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. சித்த மருத்துவர்களும், சித்த மருத்துவ ஆர்வலர்களும், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இது குறித்த ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்து, உயரிய கருத்துக்களை விவாதித்து, நமது எதிர்பார்ப்புகளை அரசுக்கு தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.