பேராசிரியர். டாக்டர். சி.பி. மாத்யூ MBBS, MS, DMR (Senior Oncologist), அவர்கள் கேரளாவில் உள்ள கோட்டயம் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அவர் பணிபுரியும் காலத்தில், நவீன மருந்துகள் மற்றும் கதிரியக்கத்தால் தீர்க்க முடியாமல், இவரால் கைவிடப்பட்ட ஒரு நோயாளி சித்த மருந்து உண்டு சரியானது கண்டு, சித்தமருத்துவம் குறித்த தேடலில் இறங்கினார். தமிழ்நாட்டின் சிவகங்கை, பழனி போன்ற இடங்களில் சுற்றிதிரிந்து புற்றுநோய்க்கு பயன்படும் சித்த மருந்துகளாகிய நவபாஷாண செந்தூரம் போன்றவைகளை அறிந்து கொண்டார். தனது நோயாளிகளிடம் நவீன மருத்துவத்துடன் இணைத்து, ஒருங்கிணைந்த சித்த-நவீன மருத்துவ சிகிட்சையை மேற்கொண்டார். இப்படி செய்யும்போது, கதிரியக்க சிகிட்சை மற்றும் நவீன புற்றுநோய் மருந்தின் அளவை குறைக்கலாம், அவற்றின் பக்க விளைவுகளை குறைக்கலாம், செலவீனம் குறையும், அதிகப்படியான பலன்களை பெறலாம் என்று பல ஆய்வுகளை செய்தார். இவர் புகழ் கேரளா மட்டுமல்ல, தமிழ்நாடு, பாண்டிசேரி என பக்கத்து மாநிலங்களிலும் பரவியது. இவர்தான் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிட்சையை முதன்முதலில் பயிற்சி செய்து காட்டிய முன்னோடி. இவருக்கு தேசிய சித்த மருத்துவ நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. அதை, அவரது 92 வது பிறந்த நாளன்று  (7-9-2021) அவரது இல்லத்துக்கே சென்று வழங்குவதற்காக, தேசீய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர். டாக்டர் மீனாகுமாரி, ஒரு சித்த மருத்துவர் குழுவை அழைத்து கோட்டயத்துக்கே சென்றார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்க தலைவர் திரு.வெற்றி செல்வன் அவர்களும் இணைய வழியில் இணைந்து கொண்டார். இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியை, கேரளாவின் சித்த மருத்துவர்கள் சங்கமும் (டாக்டர். அபில் மோகன்), கேரள அரசு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.விஜய குமார் அவர்களும் இணைந்து செரியன் ஆசிரம் மருத்துவ மனையில், சிறப்பாக நடத்தி கொடுத்தனர். இது நாள் வரையிலும் சித்த மருத்துவத்துக்காக கேரளாவில் ஒலித்துகொண்டிருந்த அந்த குரலுக்கு இந்த நாள் ஒரு அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. அதற்கு காரணமான, மருத்துவர்.மீனா குமாரி அவர்களை சித்த மருத்துவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.  டாக்டர்.சி.பி. மேத்யூ அவர்களின் ஒருங்கிணைந்த சித்தா-நவீன மருத்துவ புற்று நோய் சிகிட்சையானது, தமிழகத்தில் கிடைக்கவும், உரிய ஆராய்ச்சிகள் செய்யவும் வேண்டிய முயற்சிகளை டாக்டர். மீனாகுமாரி அவர்கள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் சார்பாக நாம் வைக்கிறோம்.